Thursday, November 13, 2014

மகா கால பைரவாஷ்டமி

14-11-2014:--காலபைரவாஷ்டமி. சிவன் ஆலயங்களில் வட கிழக்கு மூலையில் நிர்வாணமாக நாய் வாஹனத்துடன் நிற்பவர்..பயத்தை அளிப்பவர்—பயத்தை

போக்குபவர் என்பதால் பைரவர் எனப்பெயர் .பரமேஸ்வரரின் ஐந்து குமாரர்கள்:-- கணபதி, முருகன், வீ.ரபத்ரர், சாஸ்தா, பைரவர். எனப் படுவர்.

அந்தகாசுரன் என்னும் அரக்கனை சம்ஹரிக்க , பரமேஸ்வரன் தன்னிடமிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து அறுபத்து

நான்காகி அஸுரர்களை அழித்து தேவர்களுக்கு அமைதி வழங்கியது.. இதனால் தேவர்கள் மகிழ்ந்து 64 யோகினிகளை அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

காலாஷ்டமீதீ விக்ஞேயா கார்திகஸ்ய ஸிதாஷ்டமி தஸ்யா முபோஷணம் கார்யம் ததா ஜாகரணம் நிசி க்ருத்வாச விவிதாம்பூஜாம்

மஹாஸம்பார விஸ்தரைஹி நரோ மார்க ஸிதாஷ்டம்யாம் வார்ஷிகம் விக்ன முத்ஸ்ருஜேத் ( ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 429 ).

கார்த்திக மாதத்திய க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு காலாஷ்டமி அல்லது காலபைரவாஷ்டமி எனப்பெயர்.

இன்று முழுவதும் சாப்பிடாமல் உபவாசம் இருந்து மாலையில் மிகவும் விரிவான முறையில் பல விதமான பொருட்களால் பைரவரை பூஜை செய்ய வேண்டும். இரவில் இவரது சரித்ரம் , ஸ்தோத்ரம் கேட்க வேண்டும். கண்

விழித்திருக்க வேன்டும். நிவேத்யம்:- தயிர் சாதம், செவ்வாழைபழம் ; தேன்; அவல் பாயசம் முதலியன பூஜை முடிவில் சுத்த ஜலத்தால் அர்க்கியம் கொடுக்கவும் .சிவனின் படத்தில் பைரவரை பூஜை செய்யலாம்.

பூஜை செய்ய முடியாதவர்கள் அர்க்கியம் மட்டுமாவது விடலாம்.

பைரவார்க்கியம் க்ருஹாணேச பீம ரூப (அ) வ்யயாநக அநேநார்க்கிய ப்ரதானேன துஷ்டோபவ சிவப்ரிய பைரவாய நம: இதமர்க்கியம்.

ஸஹஸ்ராக்ஷி சிரோ பாஹோ ஸஹஸ்ர சரணாஜர க்ருஹாணார்க்கியம் பைரவேதம் ஸ புஷ்பம் பரமேஸ்வர. பைரவாய நம: இத மர்க்கியம்.

புஷ்பாஞ்சலீம் க்ருஹாணேச வரதோ பவ பைரவ புநர் அர்க்கியம் க்ருஹாணேதம் ஸ புஷ்பம் யாதநாபஹ பைரவாய நம: இதமர்க்கியம்..

ஒரு வருஷம் வரை ஒவ்வொரு க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியிலும் இம்மாதிரி செய்யும் மனிதர்களுக்கு எந்த ஒரு தடங்கலும் ஏற்படாது.

பய உணர்ச்சி, கடன் தொல்லை விலகும்.

Tuesday, October 7, 2014

7 நாட்களும் ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள்


காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. 

காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலந்த சாதமும் இனிப்புப் பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது. 

* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும்; வழக்கில் வெற்றி கிட்டும். 

* திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். 

* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும். 

* புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். 

* தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். 

* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். 

* சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். 

பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும். ராகு காலத்தில் சிறப்புப் பூஜைகள் செய்வதால் தோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

நன்றி ! மாலை மலர்